Pradosham.com © All Rights Reserved
 ** தமிழில் ஸ்வரக்குறிப்போடு படிக்க         *ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு:  ஒரு வைரம் நமக்கு கிடைத்தால் எப்படிப்பாதுகாப்போமோ, அதைப்போல் இந்த் ஸூக்தத்தை போற்றவேண்டும்.  அப்படி ஒரு அற்புதமான மந்திரம் இது. இம்மந்திரம், ருக் வேதத்தில் - மஹா நாராயண உபநிஷத்தில் வரும் ஒரு பகுதியாகும். இவை குளிக்கும் போதும், வருண ஜபத்தின் போதும், தினப்பூஜையிலும், குடமுழுக்கின் போதும், கும்பத்தில் வர்ணனை வைத்து உயிரூட்டப்பெற்று அபிஷேகம் செய்யும் போதும், நம் அங்கங்களை சுத்தம் செய்யும் போதும் உபயோகப்படுகிறது.  இம்மந்திரத்தின் ப்ரயோகத்தால், நம் மீது உள்ள அழுக்கும், மன அழுக்கும், பாவம் செய்தவர்களின் பொருளை, அரிந்தோ அரியாமலோ, ஏற்றுக்கொள்வதால் உண்டாகும் பாவங்களையும் களைய வல்லவையாக கருதப்படுகிறது. வேதகாலத்தில் வேத நெறியைய் ஒட்டியே வாழ்க்கை முறை வகுக்கப்பட்டது. நல்வழி, தனிமனித ஒழுக்கம், தூய்மை, நேர்மை இவற்றிற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது; பாவங்களும், கொடுமைகளும் சகித்துக் கொள்ளப்படவில்லை. அத்தகைய பாவம் செய்தவர்களிடமிருந்து அறிந்தோ அறியாமலோ பரிசுப்பொருள்கள் பெறப்பட்டால் அப்பாவத்தைப் போக்குவதற்கு பரிகாரம் தேடப்பட்டது.  இதற்கு சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு உதாரணம் அமைகிறது. ஒரு மன்னன், தன்னிடம் வந்த ஐந்து வேத விற்பன்னர்களிடம், "என் நாட்டில் திருடன் இல்லை, கஞ்சன் இல்லை, படிக்காதவன் இல்லை, கலப்படம் செய்தவன் இல்லை, குடிகாரன் இல்லை, என்று கூறி தான் அளிக்கும் பரிசுப்பொருளை ஏற்குமாறு வேண்டுகிறான்.  தீயோரிடமிருந்து பரிசுப்பொருள்களை ஏற்றால் அவை பாவமாகக் கருதப்பட்டு பரிகாரம் தேடப்பட்டது.  அத்தகைய பரிகார முயற்சியே இந்த அற்புதமான ஸூகதம்.  தீர்த்தங்களின் தலைவனான வருணதேவனிடம் "என் பாவங்களை உன் தண்ணீர் மூலம் போக்குவாயாக" என்று வேண்டப்படுகிறது.   இது அகமர்ஷண ரிஷி என்பவரின் பெயர்ரல் அழைக்கப்படுகிறது.  இதில் குறிப்பிட்டுள்ள நதிகளில் கங்கையும், யமுனையுமே இந்தியாவில் - இப்பொழுது - உள்ளது. சரஸ்வதி பூமிக்கடியில் ஓடுவதாக ஐதீகம், சுதுத்ரி, மருத்வ்ருதத, ஆர்ஜீகீ பாகிஸ்தானில் ஓடுகிறது (சட்லெஜ், பியாஸ், ரவி).


வேத மந்திரங்களும் - தமிழ் விளக்கங்களும் (வரிசைக்கிரமமாக)

ஹிரண்ய ச்ருங்கம் வருணம் ப்ரபத்யே தீர்த்தம் மே தேஹியசித: | யன்மயா புக்தமஸாதூனாம் பாபேப்யச்ச ப்ரதிக்ரஹ: ||1||

பொன் கிரீடம் தரித்த வருண தேவனைச் சரணடைகிறேன். வேண்டப்படுகிற எனக்கு தீர்த்தங்களின் பலனை நீ அருள்வாய். ஏனெனில் தீயவர்களின் பொருளை நான் அனுபவித்துள்ளேன். தீயவர்களிடமிருந்து பரிசையும் பெற்றுள்ளேன். (1)

யன்மே மனஸா வாசா கர்மணா வா துஷ்க்ருதம் க்ருதம்| தன்ன இந்த்ரோ வருணோ ப்ரஹஸ்பதிஸ்ஸவிதா ச புனந்து புன: புன: ||2||

மனத்தாலும், பேச்சாலும், செயலாலும், என்னாலோ, என்னைச் சேர்ந்தவர்களாலோ எந்தப் பாவச் செயல்கள் செய்யப்பட்டதோ, அந்தப் பாவத்தை இந்திரனும், வருணனும் ப்ருகஸ்பதியும் சூரியனும் முற்றிலுமாக தூய்மையாக்குவார்களாக. (2)

நமோSக்னயேSப்ஸுமதே நம இந்த்ராய நமோ வருணாய நமோ வாருண்யை நமோSத்ப்ய: ||3|

நீரில மறைந்திருக்கும் நெருப்பிற்கும் இந்திரனுக்கும் வருணனுக்கும் வருணனின் மனைவியாகிய வாருணிக்கும் தண்ணீரின் தேவதைகளுக்கும் நமஸ்காரம். (3)

யதபாம் க்ரூரம் யதமேத்யம் யதசாந்தம் ததபகச்சதாத் ||4||

துன்பம் தருவதாக, தூய்மையற்றதாக, அமைதியைக் குலைப்பதாக தண்ணீரில் உள்ள அனைத்தும் விலகட்டும். (4)

அத்யாசனாததீபானாத்யச்ச உக்ராத் ப்ரதிக்ரஹாத்| தன்னோ வருணோ ராஜா பாணினாஹ்யவமர்சது ||5||

அளவுக்கு அதிகமாக உண்ணுதல், அளவுக்கு அதிகமாகப் பருகுதல், தீயவர்களிடமிருந்து பரிசுகளை ஏற்றுகொள்ளல் இவை மூலமாக எந்தப் பாவங்கள் எனதாக உள்ளனவோ, அவற்றை அரசனாகிய வருணன் சொந்தக் கைகளாலேயே துடைத்து விடுவாராக. (5)

ஸோSஹமபாபோ வரஜோ நிர்முக்தோ முக்த கில்பிஷ: | நாகஸ்ய ப்ருஷ்ட்டமாருஹ்ய கச்சேத் ப்ரஹ்ம ஸலோகதாம் ||6||

பாவமற்ற, களங்கமற்ற, தளைகள் அற்ற, தீமைகள் அற்ற நான் சொர்க்கத்தின் உச்சியில் சென்று பிரம்மனுக்குச் சமமான பதவியை அடைவேனாக. (6)

யச்சாப்ஸு வருணஸ்ஸ புனாத்வகமர்ஷண: .||7||

யார் பாவம் போக்குகின்ற வருணனோ, நீரில் உறைகின்ற அவர் நம்மைத் தூய்மையாக்கட்டும். (7)

இமம் மே கங்கே யமுனே சரஸ்வதி சுதுத்ரி ஸ்தோமக்ம் ஸசதா பருஷ்ணியா| அசிக்னியா மருட்வ்ருதே விதச்தயாSSர்ஜீகீயே ச்ருணுஹ்யா சுஷோமயா. ||8||

கங்கை, யமுனை, சரஸ்வடி, சுதுத்ரி, மருத்வ்ருதை, ஆர்ஜீகீ தேவதைகளே, நீங்கள் பருஷ்ணியுடனும் அஸிக்னியுடனும் வதஸ்தையுடனும் சுஷோமையுடனும் சேர்ந்து வாருங்கள். எனது இந்தத்துதியைக் கேளுங்கள்.(8)

ரிதம் ச ஸத்யம் சாபீத்தாத்SதபஸோSத்யஜாயத| ததோ ராத்ரிரஜாயத ததஸ் சமுத்ரோ அர்ணவ: ||9||

ஒளிமயமான பரம்பொருளிலிருந்து தவத்தின் காரணமாக ரிதமும் சத்தியமும் தோன்றின. அவரிடமிருந்து இரவு தோன்றியது. அவரிடமிருந்து பரந்த கடல் தோன்றியது. (9)

ஸமுத்ராதர்ணவாததி ஸம்வத்ஸரோ அஜாயத| அஹோராத்ராணி விததத் விச்வஸ்யமிஷதோவசீ| ஸூர்யா சந்த்ரமஸௌ தாதா யதா பூர்வமகல்பயத்| திவம் ச ப்ருதிவீம் சாந்தரிக்ஷமதோஸுவ: || 10 ||

பரந்த கடலிலிருந்து வருடம் தோன்றியது. பகல்களையும் இரவுகளையும் உலகின் உயிர்களையும் படைத்து பரிபாலிப்பவரும் தலைவருமான இறைவன் முன்பிருந்ததைப் போல் சூரிய சந்திரர்களையும், வானையும், பூமியையும், வெளியையும், சொர்க்கத்தையும், படைத்தார்.(10)

யத் ப்ருதிவாக்ம் ரஜஸ்ஸ்வமாந்தரிக்ஷே விரோதஸீ | இமாக்ம்ஸ்ததாபோ வருண: புனாத்வகமர்ஷண: | புனந்து வஸவ: புனாது வருண: புனாத்வகமர்ஷண: ||11||

நீரின் தலைவரும் பாவங்களைப் போக்குபவருமான வருணன் பூமியிலும் வெளியிலும் சொர்க்கத்திலும் வசிக்கின்ற உயிர்களால் வருகின்ற பாவங்கள் எங்களை அணுகாமல் எங்களைத் தூய்மைப்படுத்துவாராக. வசுக்கள் நம்மைத் தூயவர்களாக்கட்டும். வருணன் நம்மைத் தூயவர்களாக்கட்டும். அகமர்ஷண ரிஷி நம்மைத் தூயவர்களாக்கட்டும். (11)

ஏஷ பூதஸ்ய மத்யே புவனஸ்ய கோப்தா ||12||

ஏற்கனவே இருந்தும் இப்போது இருக்கின்றதுமான உலகத்தைக் காப்பவர் இந்த வருணந்தான்.(12)

ஏஷ புண்யக்ருதாம் லோகானேஷ ம்ருத்யோர் ஹிரண்மயம்| த்யாவாப்ருதிவ்யோர் ஹிரண்மக்ம்ஸக்ம் ச்ரிதக்ம் ஸுவ: | ஸனஸ்ஸுவஸ்ஸக்ம்சிசாதி ||13||

இந்த வருணன் நன்மை செய்தவர்களுக்கு அவர்களுக்கு உரிய உலகங்களையும் தீமை செய்தவர்களுக்கு ஹிரண்யம் என்ற மரண உலகையும் அளிக்கிறார். விண்ணையும் மண்ணையும் தாங்குபவரான அவர் சூரியனாகவும் பொன்னிறத்தினராகவும் ஆகியுள்ளார். ஆனந்த வடிவினரான அவர் நமக்கு ஆசிகளையும் மங்கலத்தையும் நல்குவாராக. (13)

ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிரஹமஸ்மி| ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரஹ்மாஹமஸ்மி| யோSஹமஸ்மி ப்ரஹ்மாஹமஸ்மி| அஹமஸ்மி ப்ரஹ்மாஹமஸ்மி| அஹமேவாஹம் மாம் ஜுஹோமிஸ்வாஹா ||14||

நீரின் அடிப்படை மூலகம் போல் ஒளிர்கின்ற ஒளிநானே. அந்த ஒளியாக ஒளிர்கின்ற ப்ரம்மம் நானே. யார் நானாக உள்ளாரோ அந்த பிரம்மம் நானே. நான் இருக்கிறேன். பிரம்மமே நான். நான் நானே. நான் என்னை ஆஹுதியாக அளிக்கிறேன். (14)

அகார்ய கார்யவகீர்ணீ ஸ்வேனோ ப்ரூணஹா குருதல்பக: | வருணோSபாமகமர்ஷணஸ் தஸ்மாத்பாபாத் ப்ரமுச்யதே ||15||

செய்யக்க் கூடாததைச் செய்பவன், கோழை, திருடன், கருவை அழிப்பவன், குருவின் புகழைக் கெடுப்பவன் -- இத்தகையவனும் பாவங்களிலிருந்து விடுபடுகிறான். ஏனெனில் நீரின் தலைவனான வருணதேவன் பாவங்களை அழிப்பவர். (15)

ரஜோ பூமி ஸ்த்வமாக்ம் ரோதயஸ்வ ப்ரவதந்தி தீரா: ||16||

பாவங்களின் இருப்பிடமாக உள்ளேன் நான். அதனால் நீ என்னை அழச்செய்கிறாய் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். (16)

ஆகரான்ஸமுத்ர: ப்ரதமே விதர்மஞ்ஜனயன் ப்ரஜா புவனஸ்ய ராஜா| வ்ருஷா பவித்ரே அதிஸானோ அவ்யே ப்ருஹத்சோமோ வவ்ருதே ஸுவான இந்து:

கடல்போல் விளங்குகின்ற இறைவன் எங்கும் பரந்துள்ளார். முதலில் அவர் உயிர்களை வினைப்பயன்களுக்கு ஏற்ப படைத்தார். அவர் ப்ரபஞ்சத்தின் தலைவர், வேண்டியவற்றை அளிப்பவர். புனிதமான இடமாகிய இதயத்தில் உறைகிறார் அவர். அவர் மேலானவர், உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டியவர், எல்லோரையும் காப்பவர், உமாதேவியுடன் கூடிய அவர் எல்லையற்று வளர்பவர், வினைப்பயன்களை அளிப்பவர், நிலவுபோல் ஆனந்த வடிவினர்.
அகமர்ஷண ஸூக்தம் 
விளக்கங்களும், எப்பொழுது உபயோகிக்கப்படுகிறது என்ற குறிப்புகளும்....